
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்றோடு (மே 13) முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்த நிலையில், இந்திய வரலாற்றில் பௌத்த சமயத்திலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் நபர் என்ற சாதனையை பி.ஆர்.கவாய் படைத்திருக்கிறார்.
யார் இந்த பி.ஆர். கவாய்?
அமராவதியில் 1960, நவம்பர் 24-ம் தேதியன்று பிறந்த பி.ஆர். கவாய், தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, 1985 மார்ச்சில் சட்டப் பணியைத் தொடங்கினார். 1987 வரை மறைந்த முன்னாள் அட்வகேட் ஜெனரலும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான ராஜா எஸ்.போன்சலேவிடம் பணியாற்றினார்.
அதன்பின்னர், 1987 முதல் 1990 வரை, அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனியாகப் பணியாற்றத் தொடங்கினார். அதன்தொடர்ச்சியாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், நாக்பூர் நகராட்சி, அமராவதி நகராட்சி, அமராவதி பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
அங்கிருந்து, 1992 முதல் 1993 வரை சுமார் ஓராண்டு காலம் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அரசு உதவி வழக்கறிஞராகவும், அரசு கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றிய பி.ஆர். கவாய், 2000-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த 3 ஆண்டுகளில் சரியாக 2003, நவம்பர் 14-ம் தேதியன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்ந்தார். அதற்கடுத்த 2 ஆண்டுகளில் (2005, நவம்பர் 14) மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார்.

அந்த சமயத்தில், மும்பை முதன்மை அமர்வு மற்றும் நாக்பூர், ஔரங்காபாத், பனாஜி அமர்வுகளில் முக்கிய வழக்குகளில் தலைமை நீதிபதியாக முக்கிய பங்காற்றியதையடுத்து, 2019, மே 14-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2024-ல் பட்டியல், பழங்குடியின இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அந்தச் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரைத் துணை வகைப்படுத்தி, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்த சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பி.ஆர். கவாய் ஒருவராக இருந்தார்.
அந்தத் தீர்ப்பில் பி.ஆர். கவாய், “இட ஒதுக்கீட்டின் பலன்கள் மூலம் செல்வச் செழிப்பு நிலையை அடைந்த மக்களை அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களாகக் கருத முடியாது.
அவர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீடு விதிகளில் இருந்து வெளியேறி, மேலும் தகுதியான SC, ST பிரிவினருக்கு வழிவிட வேண்டும் என்ற நிலையை அடைந்துவிட்டனர்.
அதனால், அத்தகையவர்களை இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து விலக்க, SC, ST பிரிவினருக்குள்ளும் கிரீமி லேயரை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.

இது மட்டுமே, அரசியலமைப்பின் கீழ் உள்ள உண்மையான சமத்துவத்தை அடைய உதவும். மேலும், 1949-ல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரையிலுள்ளபடி, சமூக ஜனநாயகம் இல்லாத வரையில் அரசியல் ஜனநாயகத்தால் எந்தப் பயனும் இல்லை.” என்ற முக்கிய கருத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றிருக்கிறார். இந்த ஆண்டு நவம்பர் 23 வரை சுமார் 6 மாத காலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியிலிருப்பார்.

இவரைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாகவும், இந்திய வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் பி.வி.நாகரத்னா பதவியேற்பார்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு, உச்ச நீதிமன்றம் முதல் பெண் தலைமை நீதிபதியைப் பெற 79 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
இவ்வளவு ஆண்டுகளுக் பின்னர், இவர் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவரின் பதவிக்காலம் வெறும் 36 நாள்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.