• May 14, 2025
  • NewsEditor
  • 0

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2013-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,301 ரன் எடுத்துள்ள ரோஹித் சர்மா 2019ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்து சாதனை படைத்தார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசு இல்லமான வர்ஷாவிற்கு ரோஹித் சர்மாவை அழைத்திருந்தார். அவர் டெஸ்ட் போட்டியில் இவ்வளவு நாட்களும் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பட்னாவிஸ், `வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் வெற்றி பெற வாழ்த்துவதாக’ தெரிவித்தார்.

`அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில்..!’

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இருவரும் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்த முதல்வர் ஃபட்னாவிஸ், “இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை எனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் வரவேற்று, சந்தித்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும், அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா கடந்த வாரம்தான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், ஒரு நாள்போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா அவரின் ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருக்கிறார்.

ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் ஹோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *