
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடைசியாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி வேக்சின் வார்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுராக் காஷ்யப் தொடர்பாக விவேக் அக்னிஹோத்ரி பேசியது இணையத்தில் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அவர் பேசுகையில், “நான் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் ‘கோல்’ என்ற படத்தில் ஒன்றாக வேலை செய்தோம்.
அவர் அந்தப் படத்தின் வசனகர்த்தாவாக இருந்தார். சயிஃப் அலி கான் மற்றும் பிரியங்கா சோப்ரா முதலில் நடிக்க இருந்தனர்.
ஆனால், அப்போது சயிஃப்புக்குச் சில தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் அவர் விலகிவிட்டார்.
பின்னர் நாங்கள் ஜான் மற்றும் பிபாஷாவை இணைத்தோம். அனுராக் அந்தக் காலத்தில் அதிகமாக மது அருந்துவார். அதனால் அவருக்கு நேரத்தின் மதிப்பு தெரியாது.

பின்னர் அவர் விக்ரமாதித்யா மோட்வானேவைப் படத்தின் எழுத்துப் பணிகளுக்கு அழைத்து வந்தார்.
‘இவர் உதவியாக இருப்பார்’ எனக் கூறி விக்ரமாதித்யா மோட்வானேவை அறிமுகப்படுத்தினார். படிப்படியாக எல்லா பணிகளும் விக்ரமாதித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
நான் உருவாக்க விரும்பியது வேறு. அவர்களின் பார்வை முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது. இறுதியில், நாங்கள் மோதல் போக்கிலிருந்தோம்.
இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் அனுராக்குடன் பேசியது. அனுராக்கைக் கையாள்வது மிகவும் கடினமாகிவிட்டது,” எனப் பேசியிருக்கிறார்.
விவேக் அக்னிஹோத்ரியின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த அனுராக் காஷ்யப், “அவர் மிகப் பெரிய பொய்யர்.
அவர்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தினார்கள். நான் இந்தியாவில் இருந்தேன்.
அவர் விக்ரமாதித்யா மோட்வானேவின் கதையையோ அல்லது என்னுடைய கதையையோ விரும்பவில்லை.

அவர் ‘லகான்’ போன்ற ஒரு கால்பந்து படத்தை உருவாக்க விரும்பினார்.
அதற்காகத் தனது சொந்த எழுத்தாளரை வைத்து அந்த மோசமான கதையை எழுத வைத்தார்.
நானோ மோட்வானேவோ ஒருபோதும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லவில்லை” எனத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…