
புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யின் சம்பலில் கடந்த வருடம் நவம்பர் 15-ல் வழக்கமான வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டிருந்தது. அப்போது நிற்காமல் சென்ற ஒரு வாகனத்தை துரத்திப் பிடித்ததில் வாராணசியை சேர்ந்த ஓம்காரேஷ்வர் மிஸ்ரா (40) சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் 29 ஏடிஎம் அட்டைகள் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் போலி காப்பீடுகள் செய்து மோசடி செய்து வருவது தெரியவந்தது.