
மதுரை: மதுரை மாநராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் சேர்த்து மொத்தமே 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெருநாய்களால் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நல துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சியில் தனியார் நிறுவனம், விலங்குகள் நலத்தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை மாநகராட்சி நகர் நலத்துறை, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் 23 வரை தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டது.