
தாம்பரம், வண்டலூர் வட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போரிடம் பட்டா பெற்றுத் தருவதாக கூறி வசூல் நடைபெறுவதாகவும், அப்பாவி மக்களை மோசடி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. சென்னையை சுற்றியுள்ள, 532 கிராமங்களைச் சேர்ந்த, 29,187 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்; தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 57,084 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், இதனையொட்டி வழிகாட்டி விதிகள், நடைமுறைகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி தரிசு நிலம், கல்லான்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை – புஞ்சை, அரசு அனாதீனம், பொதுகல் வகைபாட்டு நிலங்களில் வசிப்போர் பட்டா பெறலாம். வண்டிப்பாதை, பாதை, பாட்டை, களம், மயானம், தோப்பு வகைப்பாட்டில் உள்ள நிலங்களில் வசிப்போர், வரன்முறை அடிப்படையில் பட்டா பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.