• May 13, 2025
  • NewsEditor
  • 0

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தளபதி அல்லா நாசர் பலோச்சின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

30 நிமிடம் நீளும் அந்த வீடியோவில் அவர், சர்வதேச சமூகம் மற்றும் இந்திய நோக்கி பேசுகிறார். பாகிஸ்தானை பாசிச அரசு என விமர்சிக்கும் அவர், பலுசிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அல்லா நாசர் பலோச் நீண்டநாட்களாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு அவர் இந்தியாவில் மரணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் பலுசிஸ்தான் அமைப்புகள அதனை மறுத்து வருகின்றன.

2015ம் ஆண்டே அவர் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையில் மரணமடைந்ததாக பாகிஸ்தான் அறிவித்தது. எனினும் அதனை மறுத்து சில மாதங்களில் வீடியோவில் தோன்றினார் அல்லா நாசர்.

Balochistan Liberation Front (BLF) Commander-in-Chief Allah Nazar Baloch

மீடியாக்களும், உளவுத்துறையும் எட்டமுடியாத முக்கிய பலுசிஸ்தான் தலைவரான அவர், இப்போது ஈரானில் மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில் தோன்றியுள்ள அல்லா நாசர், “1971ம் ஆண்டு போரின்போது வங்காளதேசத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்த 93,000 துப்பாக்கிகளை மட்டும் இந்தியா எங்களிடம் தர வேண்டும்.” என நேரடியாக இந்தியாவை நோக்கி கேட்டுள்ளார்.

முரட்டு பாசிச அரசான பாகிஸ்தான், பலுசிஸ்தான் இன மக்களை வன்முறை மற்றும் கொலைகள் மூலம் அடக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“பலுசிஸ்தான் சமூகம் அதன் சுதந்திரத்துக்காக போராடுகிறது.” என்று தெரிவித்ததுடன், பாகிஸ்தான் ராணுவமும் அதன் கைப்பாவையாக இருக்கும் அமைப்புகளும் காலனித்துவ பாணி அடக்குமுறைகளை நிகழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

பலுசிஸ்தான் கொடி

பாகிஸ்தான் ராணுவத்தால் 100க்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு நிஷ்தர் மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பிணங்கள் குவிக்கப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ஊடகங்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் பார்வையில் மட்டுமே செய்திகளை முன்வைப்பதாக குற்றம் சுமத்தினார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பலுசிஸ்தானின் நடவடிக்கைகள் வலுத்துவரும் சூழலில், பலுசிஸ்தான் படை அப்பாவி மக்களை தாக்குவதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மாறாக, பாகிஸ்தான் ராணுவத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளையும் கட்டற்ற அதிகாரத்தையும் நியாயப்படுத்த ஒரு எதிரி தேவைப்படுவதால் தங்களை சித்திரித்துக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மனிதநேயத்தின் நண்பர்கள், நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம்” என சர்வதேச சமூகத்தை நோக்கிக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *