
பனாஜி: கோவாவில் அணுமின் நிலையம் அமைக்கும் பாஜகவின் பரிந்துரையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. கடற்கரை மாநிலமான கோவா பாஜகவின் ஆபத்தான பரிசோதனைகளுக்கான ஆய்வகம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் மனோகர் லால் கத்தார், தங்களுடைய பகுதிகளில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதாக திங்கள்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கோவாவின் நகர்புற மேம்பாடு மற்றும் மின்சாரத் துறையின் மறுஆய்வுக் கூட்டத்தில் கோவாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.