• May 13, 2025
  • NewsEditor
  • 0

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு  நியாயமானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஒரு நியாயம் கிடைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கனிமொழி

பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியிடாமல் அவர்களுக்கு  நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினால் பெண்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே,  தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு தண்டனை வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தார்.

அது தற்போது நிறைவேறி உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து  இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி அழுத்தம் கொடுத்து வந்ததன் அடிப்படையில், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு  சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது.

கனிமொழி

மேலும் பாலியல் குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. இன்று அ.தி.மு.க வெட்கித் தலைகுனிய வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *