
ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. எதிர்பார்த்திடாத முடிவு இது.
விராட் கோலி எதிலும் திருப்திப்பட்டுக் கொள்பவர் அல்ல. அவருக்கு எல்லாமே இன்னும் இன்னும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரின் பசி ஓயாதது. அதுதான் அவரின் வெற்றி ரகசியமும் கூட.
சேப்பாக்கத்தில் போட்டிகள் நடக்கும்போது பார்த்திருக்கிறேன். ஒரு இன்னிங்ஸில் அவுட் ஆகி பெவிலியனுக்குச் செல்வார். உடனே பயிற்சிக்கான ஜெர்சியை மாற்றிவிட்டு வெளியே இருக்கும் சிறிய மைதானத்தில் உடலின் வியர்வை வழிந்தோட வலையில் பேட்டிங் ஆடுவார். சந்தேகமே இல்லாமல் இப்போதைய இந்திய அணியில் அதிகமாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவது கோலிதான்.
ஏனெனில், அவருக்கு அவர் இருக்கும் நிலையில் திருப்தியே இருக்காது. இன்னும் இன்னும் ரன்கள் அடிக்க வேண்டும். இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும். அதற்கேற்ப தன் உடற்கட்டையும் வைத்துக் கொள்வார். இப்போது நடக்கும் ஐ.பி.எல் இல் கூட பாருங்கள். அதிகமாக ஓடி ஓடி ரன்கள் எடுத்தது விராட் கோலியாகத்தான் இருப்பார். 25 வயது இளைஞனை ஒத்த சுறுசுறுப்பு.

கோலி பார்மில் இல்லை, முன்பைப் போல ஆடுவது இல்லை என என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இன்னமும் அவரிடம் 2-3 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படியொரு நிலையில் கோலி போதும் என்கிற மனநிலைக்கு எப்படி வந்தார் என்பதுதான் அத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. 2020-21 காலக்கட்டத்தில் பிசிசிஐ அவரை வைத்து ஆடிய ஆட்டமும் திருமணமும் குழந்தைகளும் கோலியை நிறையவே பக்குவப்படுத்தியிருக்கிறது. நிதானிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
காட்டையே அள்ளி உண்டு செரிக்குமளவு பசி கொண்ட ஒரு மிருகம், போதும் என விலகி நிற்பதை ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட மனநிலையாகவே பார்க்கிறேன்.

‘என்னுடைய டெஸ்ட் கரியரை எப்போதுமே ஒரு சிறு புன்னகையுடன் திரும்பிப் பார்த்துக் கொள்வேன்.’ என தனது ஓய்வு அறிவிப்பில் கோலி குறிப்பிட்டிருக்கிறார். நமக்குமே அப்படித்தான். கோலியின் கரியர் புன்னகையை மட்டுமல்ல, ஒரு உத்வேகத்தையும் சேர்த்தே நமக்குக் கொடுக்கும்.
இன்னமும் அந்த 2014-15 பார்டர் கவாஸ்கர் தொடர் நியாபகமிருக்கிறது. இந்திய அணி தொடரை இழந்துவிடும். தோனி திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிடுவார். எஞ்சியிருக்கும் கடைசிப் போட்டியில் கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார். அதுவரைக்கும் இந்திய அணி ஒரு யதார்த்த பாதையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தது.
ஏனெனில், தோனி அப்படியான சிந்தாந்த்தை கொண்டவர். அவர் எல்லையை மீறி ஒருவித கனவு நிலையில் யோசிக்கமாட்டார். போட்டிகள் டிராவை நோக்கி நகர்வதில் அவருக்கு எந்த பதற்றமும் இருக்காது. ஆனால், கோலி அப்படியில்லை. அவர் நவீன தலைமுறையின் பிரதிநிதி. அவருக்கு தற்காப்பாக யோசிப்பது பிடிக்கவே பிடிக்காது.

‘கோலியின் சித்தாந்தம்!’
அட்டாக்கிங்காக ஆட வேண்டும். அதிரடியாக வேண்டும். வெற்றியைத் தவிர வேறெதிலும் திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடாது. இதுதான் கோலியின் சித்தாந்தம். அதை தன்னுடைய முதல் போட்டியிலிருந்தே இந்திய அணிக்குள் புகுத்த ஆரம்பித்தார். சிட்னியில் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட்டில் கடைசி நாளில் இந்திய அணிக்கு 355 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்தப் போட்டி டிராதான் ஆனது.
ஆனால், கோலியின் இந்திய அணி டிராவுக்காக ஆடவில்லை. டார்கெட்டை எட்ட எவ்வளவோ முயன்று முடியாமல் போட்டி டிராவை நோக்கி சென்றது. அதேமாதிரி, இதே தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியிலும் கோலிதான் கேப்டன். தோனி காயம் காரணமாக அந்தப் போட்டியில் ஆடியிருக்கமாட்டார். அந்தப் போட்டியிலும் 350+ டார்கெட்.

அதையும் முட்டி மோதி சேஸ் செய்யவே இந்திய அணி முயன்று ஆல் அவுட் ஆகியிருக்கும். இந்திய அணி அதற்கு முன் காணாத வேகம். அதற்கு முன் காணாத துடிப்பு. கங்குலி இந்திய அணிக்குள் ஆக்ரோஷத்தை புகுத்தினார் எனில், கோலி அதை வேறொரு கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். இந்திய அணியின் 11 வீரர்களுமே எதிரணிக்கு எந்நேரத்திலும் பதிலடி கொடுக்கும் முனைப்பிலேயே இருப்பர். அதனால்தான் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சென்று இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
2021 – இங்கிலாந்து தொடர்!
2021 இல் நடந்த அந்த இங்கிலாந்து தொடரை மறக்கவே முடியாது. லார்ட்ஸில் ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்பதே இந்தியாவுக்கு பல தசாப்த கனவாக இருந்திருக்கிறது. அதை தோனி செய்து காட்டினார். ஆனால், கோலி இன்னும் ஒரு படி மேலே சென்றார். லார்ட்ஸில் இங்கிலாந்து அணியை அலற வைத்தார்.
வெறும் 60 ஓவர்கள், அதாவது இரண்டு செஷன்கள் நின்று ஆடிவிட்டால் இங்கிலாந்தால் போட்டியை டிரா செய்துவிட முடியும் எனும் நிலை. ஆனால், இங்கிலாந்தால் அந்த 60 ஓவர்களை தாக்குப்பிடித்திருக்க முடியாது. ஆல் அவுட் ஆகியிருப்பார்கள்.
‘அடுத்த 60 ஓவர்களுக்கு அவர்கள் நரகத்தில் இருப்பது போல உணர வேண்டும்.’ என மைதானத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தன்னுடைய சகாக்களிடம் கோலி கூறியிருப்பார். பேசியதைப் போலவே இங்கிலாந்து வீரர்களை நரகத்தில் இருப்பதைப் போலவே உணரச் செய்தார்.

கோலிக்கு முந்தைய காலம் வரைக்கும், வெளிநாட்டில் இந்திய அணி தொடரை வெல்வது அரிதினும் அரிதான காரியம். விமானம் ஏறும் முன்பே தோற்கப்போகிறோம் என்கிற மனநிலையுடன்தான் ஏறுவார்களோ என கூடத் தோன்றும். கோலிதான் இதையும் மாற்றினார். வெளிநாடுகளில் போட்டிகளை வெல்வதே கனவாக இருந்த சூழலில், கோலி வெளிநாடுகளில் தொடர்களை வெல்ல ஆரம்பித்தார்.
ஆஸ்திரேலியாவையும் இங்கிலாந்தையும் இந்தியாவை அவர்களுக்கு ஈடான போட்டியாளர்களாக பார்க்க வைத்தார். உள்ளூரிலும் கோலியின் கேப்டன்சி காலக்கட்டத்தில் இந்திய அணி ஒரு தொடரை கூட இழந்ததாக நியாபகத்தில் இல்லை. 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்திலேயே வைத்திருந்தார்.

தொடர்ந்து 9 தொடர்களை வென்று ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ஈடு செய்தார். இப்படி அவரின் கேப்டன்சியில் இந்தியா எட்டிய உயரங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதற்கெல்லாம் அடிப்படை, கோலி பௌலர்களின் கேப்டனாக இருந்தார். அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கேப்டனாக இருந்தார். அதனால்தான் இந்திய அணியால் வெளிநாடுகளில் இந்திய அணியால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது.

துணிச்சல்மிக்க கேப்டன்சி, அசராத பேட்டிங் என எல்லாவற்றுக்குமே அடிப்படை அவரின் அந்த இன்னும் இன்னும் வேண்டும் என்கிற குணாதிசயம்தான். அப்படிப்பட்ட கோலி அவரால் இன்னும் 2-3 ஆண்டுகள் ஆட முடியும் எனும் சூழலிலேயே ஓய்வை அறிவிப்பதுதான் வியப்பாக இருக்கிறது. ஆனால், எப்படி பார்த்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் அவர்தான். அவர் விட்டுச் செல்லும் சகாப்தத்திற்கு ஈடாக இன்னொரு வீரர் வளர்ந்து வருவது கடினமான விஷயமே.