• May 13, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.

ஏற்கெனவே, 2024 உலகக் கோப்பையை வென்றபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வை அறிவித்தனர்.

இப்போது, டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருப்பதால், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடுவார்கள்.

ரோஹித் – கோலி

2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு வென்ற டி20 உலகக் கோப்பையிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் இருவரும் நன்றாக விளையாடியிருந்தனர்.

இருப்பினும், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இந்த நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், கோலியின் எதிர்காலம் குறித்து ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “இந்த ஃபார்மட்டில் (ஒருநாள் போட்டிகள்) அவர்கள் மிகப்பெரிய வீரர்களாக இருந்திருக்கின்றனர். இருப்பினும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்கள் இடம்பெற முடியுமா எனத் தேர்வுக்குழு பார்க்குமா? அதற்கேற்றவாறு இவர்கள் ஃபெர்பாமென்ஸ் செய்வார்களா? அதுதான் தேர்வுக்குழுவின் எண்ணமாக இருக்கும். அவர்களால் முடியும் என்று தேர்வுக்குழு நினைத்தால், அவர்கள் இடம்பெறுவார்கள்.

கவாஸ்கர்
கவாஸ்கர்

ஆனால் நேர்மையாகச் சொல்கிறேன், அவர்கள் விளையாடுவார்கள் (2027 உலகக் கோப்பை) என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், அடுத்த ஒரு வருடத்தில் நல்ல ஃபார்மில் தொடர்ந்து சதங்கள் அடித்தால், கடவுளால் கூட அவர்களை அணியிலிருந்து கழற்றிவிட முடியாது.” என்று கூறினார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித்தும், கோலியும் விளையாடுவார்களா என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *