
கேரள மாநிலம், திருவனந்தபுரம் நந்தன்கோடு க்ளப்ஹவுஸ் அருகே வசித்து வந்தவர் ராஜாதங்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி ஜீன் பத்மா திருவனந்தபுரம் அரசு பொதுமருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு கரோலின் என்ற மகளும், கேடல் ஜின்சன் ராஜா (38) என்ற மகனும் இருந்தனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் ராஜாதங்கம், ஜீன் பத்மா, அவர்களது மகள் கரோலின், இவர்களது வீட்டில் உதவியாக இருந்த உறவினரான வயதான பெண் லலிதா ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் தீ எரிந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்ததால், கொலை நடந்த விபரம் 3 நாட்களுக்குப் பின்னர் வெளியே தெரியவந்தது. கொலையானவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட நான்கு பேரையும் கொலைசெய்தது கேடல் ஜின்சன் ராஜா என்பது தெரியாவந்தது.
வீட்டு மாடியில் உள்ள தனது அறைக்கு ஒவ்வொருவரையும் அழைத்து பின்பக்கம் இருந்து கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார், கேடல் ஜின்சன் ராஜா. கொலை செய்த நால்வரின் உடல்களையும் வெட்டி துண்டுகளாக்கி பிளாஸ்டிக் கவரில் கட்டி, கழிவறையில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதில் கேடல் ஜின்சன் ராஜா-வுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னைக்கு தப்பிச் சென்றவர், சில நாட்களுக்குப் பின் திருவனந்தபுரத்துக்கு சென்றபோது போலீஸார் அவரை கைதுசெய்தனர். ஆத்மாவை உடலில் இருந்து பிரிக்கும் பரிசோதனைக்காக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் கேடல் ஜின்சன் ராஜா தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மனநலம் பாதித்திருக்கலாம் என போலீஸார் கருதினர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மனநல பிரச்னை எதுவும் இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து போலீஸார் முறைப்படி விசாரித்ததில் தந்தை தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும், தாயும், சகோதரியும் வெளிநாட்டுக்குச் செல்வதை தடுக்கும் வகையிலும் இந்த கொலைகளை அரங்கேற்றியதாக கேடல் ஜின்சன் ராஜா வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த வழக்கு திருவனந்தபுரம் ஆறாம் அடிஷனல் கோர்ட்டில் நடந்துவந்தது. 2024 நவம்பர் மாதம் 13-ம் தேதி இந்த வழக்கில் வாதம் தொடங்கியது. 42 சாட்சிகள், 120 ஆவணங்கள் மற்றும் வழக்கு சம்பந்தமான 90 பொருட்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டன. நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூட இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சாட்சிகள் மூலம் கொலை நடந்தது நிரூபிக்கப்பட்டது. கொலை செய்யும் முன்பு யூ டியூப்பில் கோடரியால் கொலை செய்வது குறித்த வீடியோக்களை பார்த்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மழு எனப்படும் கோடரியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கியதற்கான ஆதாரங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த கொலை வழக்கில் கேடல் ஜின்சன் ராஜா குற்றவாளி என கோர்ட் நேற்று தீர்ப்பளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று நீதிபதி விஷ்ணு அளித்த தீர்ப்பில் கேடல் ஜின்சன் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.