
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’.
‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் பேசிய சிம்ரன், “நான் இந்தியாவில் இல்லாதக் காரணத்தால் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். கதை கேட்டப்போதே இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குநர் அபியிடம் சொன்னேன்.
இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்குப் பெருமைப்படுகிறேன். நான் 30 வருடமாக இந்த சினிமாத்துறையில் இருக்கிறேன். ரசிகர்கள் இல்லையென்றால் இந்த வெற்றி அடைவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

சசிகுமார் சார் மிகவும் தன்னடக்கமான ஒரு மனிதர். நல்ல இயக்குநர் மற்றும் நடிகர். டயலாக் எப்படி பேச வேண்டும். இலங்கை தமிழில் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.
அவரிடம் இருந்துக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. 20 வருடங்களுக்கு பிறகு இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய படக்குழு அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.