• May 13, 2025
  • NewsEditor
  • 0

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாட்டையே உலுக்கியிருந்தது. இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசைவார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, சித்ரவதை செய்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல்.

“அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க” என்று கதறிய பெண்ணின் வீடியோ காண்போரின் மனதை கலங்க வைத்திருந்தது. காவல்துறை விசாரணையில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இந்தக் கொடுமைக்கு நீதி கேட்டு தமிழ்நாடே கொந்தளித்திருந்தது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: `9 பேரும் குற்றவாளி; ஒருவர் கூட பிறழ் சாட்சியாகவில்லை’ – சிபிஐ வழக்கறிஞர்

இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், இன்று (மே 13ம் தேதி) இந்த வழக்கின் தீர்ப்பை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பூட்டிய அறையில் வாசித்தார். இதில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி விஜய் வரை பல முக்கிய அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!

தா.வெ.க தலைவர் விஜய்

’90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

பா.ம.க, அன்புமணி ராமதாஸ்

‘பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.’

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்!

இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைக்க வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றம், 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருந்தால் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல.

பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *