
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.
இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில் மே 10 ஆம் தேதி மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கடந்த சில இரவுகள் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. கடந்த சில நாள்களாக, ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும், ஒவ்வொரு செய்தி அறிவிப்புக்குப் பின்னும், ஒவ்வொரு இரவு உணவுக்குப் பின்னும் ஒரு பதற்றம் இருந்தது.
எங்கோ ஒரு மலை உச்சியில் நமது வீரர்கள் விழித்திருப்பதையும், எச்சரிக்கையுடன் இருப்பதையும், ஆபத்தில் இருப்பதையும் நாம் பார்த்தோம். நம் வீடுகளில் நாம் பாதுகாப்பாக இருந்தபோது இருளில் நின்று, தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து உறக்கத்தை மறந்து நம்முடைய இராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள். இது வெறும் வீரமல்ல, இது ஒரு தியாகம். ஒவ்வொரு ராணுவ சீருடைக்குப் பின்னும், தூங்காமல் இருக்கும் ஒரு தாய் இருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாம் அன்னையர் தினத்தைக் கொண்டாடினோம். அப்போது ஒவ்வொரு வீரர்களையும் வளர்த்த தாயைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த பிரச்னையின் மூலம் இறந்த வீரர்களுக்காக வருந்துகிறோம். கண்ணீரை அடக்கி கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் அன்பைப் பகிர்வோம். நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம். நம் பாதுகாவலர்களுக்காக… இந்தியாவுக்காக. ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…