
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுநிலையில் மருத்துவமனையில் 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சப்படுகின்றனர்.
மூத்த போலீஸ் அதிகாரி மனீந்தர் சிங் சம்பவம் நடந்த கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், “இரவு 9.30 மணிக்குத்தான் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இறப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே விரைந்து செயல்பட்டு 5 பேரை கைது செய்துள்ளோம்.” என்றார்.
விஷ சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக முக்கிய குற்றவாளி பிரப்ஜித் சிங் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த அனைவரும் உள்ளூரில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்து வந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரே மாதிரியான மதுவை அருந்தி இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் சாக்ஷி தெரிவித்துள்ளார்.