
மனித வாழ்க்கையில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டாலும், அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
தவறான புரிதல்கள் வாழ்கையில் நமக்கு, கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி கிரேக்க நாட்டில் நடந்த ஒரு சம்பவம், `கிரேக்க சிட்டி டைம்ஸ்’ ஊடகத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேக்க நாட்டில் காபி கிண்ணத்தை வைத்து எதிர்காலத்தை கணிக்கும் பண்டைய ஜோதிடமான டாசியோகிராஃபி (tasseography) தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
இது தற்போது AI சாட்பாட் மூலம் நவீனபடுத்தப்பட்டுள்ளது. பலரும் நவீன டாசியோகிராஃபி AI ஜோதிடத்தை கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருமணமான கிரேக்க பெண் ஒருவர் டாசியோகிராஃபி AI மூலம் தனது கணவரின் அதிர்ஷ்டத்தையும் எதிர்காலத்தையும் கேட்டுள்ளார்.
அதற்கு இந்த சாட்பாட் அந்த பெண்ணின் கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த பெண்ணின் எழுத்து E என்ற வார்த்தையில் தொடங்குவதாகவும் கூறியுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அந்தப் பெண் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.
முதலில் நகைச்சுவையான விஷயமாக கடந்த சென்ற அந்த பெண்ணின் கணவருக்கு, இரண்டாவது வாரம் அந்த பெண்ணின் வழக்கறிஞரிடமிருந்து விவாரகரத்து நோட்டீஸ் வரவே விபரீதத்தை உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளிடம் அவர் கூறும் போது தனது மனைவி கடந்த சில ஆண்டுகளாக ஜோதிடம் உள்ளிட்ட மாய சக்திகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். Al ஜோசியக் கணிப்புகளை வைத்து தன்னிடம் விவாகரத்து கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கணவரின் வழக்கறிஞர் கூறும் போது AI ஜோசியத்தை அடிப்படையாக வைத்து விவாகரத்தினை சட்டபூர்வமாக வழங்க முடியாது, வேறு விதமாக நிரூபிக்கும் வரை அவர் நிரபராதி தான் எனக் கூறியுள்ளார்
ஒரு Al சொன்ன ஜோதிடம், கணவன் மனைவி இடையே விவாகரத்து வரை கொண்டு சென்றது இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.