
மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் காட்டும் சேவையைத் தொடங்கியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மனோஜ்.
retirementjobs.in இணையதளத்தை இவர் தொடங்கிய சில தினங்களிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்கள் பெயர்களை அதில் பதிவு செய்து விட்டார்களாம்.
‘எனக்குத் தெரிய இப்படி ஒரு வேலையைச் செய்கின்ற முதல் ஆள் இந்தியாவில் இவராகத்தான் இருக்கும்’ என வெப்சைட் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ‘நீயா நானா’ கோபிநாத் இவரை வாழ்த்தினார்.
மனோஜிடம் பேசினோம்.
”எங்கப்பா தமிழக அரசு உயரதிகாரியா வேலை பார்த்தவர். இந்த தொடர்பில் எங்க குடும்ப நட்பு வட்டத்தில் நிறைய அதிகாரிகள் இருந்தாங்க.
அப்பாவுடைய அந்த நண்பர்களைச் சின்ன வயசுல இருந்தே நான் பார்த்துட்டு வந்தவன். அவங்கள்ல முக்கால்வாசிப் பேருக்கு ஓய்வு பெரிய கவலையைத் தருவதைப் பார்த்தேன்.
அதாவது உடல் நிலை ஒத்துழைக்காத ஒரு சிலர் தான், சரி இனி பேசாம வீட்டில் இருப்போம்னு கோவில் குளம் போயிட்டு வந்தபடி ரிலாக்சா இருக்காங்க.
மத்தவங்களுக்கு அந்த ஓய்வுங்கிறது விரும்பி ஏத்துக்கிடறதா இல்லை. கிட்டத்தட்ட முப்பது வருஷம் பிசியா இயங்கியபடி, பலரை வேலை வாங்கிட்டு இருந்தவங்களைத் திடீர்னு சும்மா வீட்டில் உட்காருங்கன்னு சொன்னா எப்படி அதை விரும்புவாங்க?
அதே நேரம் எங்காவது போய் வேலை செய்யலாம்னா வேலை தேடறதுக்கோ வேலை கேக்குறதுக்கோ ரொம்பவே தயக்கம்? அதனால் தெரிஞ்சவங்ககிட்ட ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்கங்கிறதோட நிறுத்திக்கிடுறாங்க.
இப்படியான ஆட்கள் நிறையப் பேர் கிட்டப் பேசினப்ப, சில விஷயங்கள் என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுச்சு. அதாவது ஓய்வு பெறுகிறவர்கள்ல நிறையப் பேர் தொடர்ந்து உடல் ஒத்துழைக்கும் வரை இயங்கிட்டே இருக்கணும்னுதான் நினைக்கிறாங்க.
தங்களுடைய பணிக்கால அனுபவங்கள் எங்காச்சும் பயன்படட்டும்னு நினைக்கிறவங்க. அதுக்கான ஊதிய விஷயத்துலயும் கறார் காட்ட விரும்பறதில்லை.
சரி, ஓய்வுக்குப் பிறகு இவங்களுக்கு என்ன வேலை பொருத்தமா இருக்கும்? இவங்களுக்கு வேலை தருகிற நிறுவனங்கள் யார்?னு அந்தப் பக்கம் பத்தி சில ரிசர்ச்களைப் பண்ணினோம்.

அப்பதான் எக்கச்சக்க ஆஃபர்கள் இவர்களுக்காகக் குவிஞ்சு கிடக்குதுங்கிறதே தெரிய வந்தது. கார்ப்பரேட் தொடங்கி சிறு சிறு தனியார் நிறுவனங்கள் வரை எல்லாருக்குமே அரசாங்கத்தின் பல துறைகளைப் பல வேலைகளுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டியிருக்குது.
இந்த இடத்துல அரசாங்கத்தில் பணிப்புரிஞ்ச ஒரு ஆள் இருந்தா நல்லதுனு நினைக்கிறாங்க. நாங்க விசாரிச்ச பல தனியார் நிறுவனங்கள்ல இப்படியொரு ஆளை டெம்ப்ரவரியாகவோ அல்லது அப்பப்ப பயன்படுத்திக்கிடற மாதிரியோ வச்சிட்டுதான் இருக்காங்க.
அந்தக் கம்பெனிகள்கிட்டப் பேசினப்ப நிரந்தரமா அப்படியொரு ஆள் இருந்தா ரொம்பவே நல்லதுனு சொன்னாங்க.
இது போதாதா? இப்படியான தனியார் நிறுவனங்களையும் வேலை பார்க்கத் தயாரா இருக்கிற ரிட்டயர்டு மக்களையும் இணைக்கிற ஒரு தளத்தை உருவாக்கிட்டோம்’ என்கிற மனோஜ்,
‘இதை நாங்க வேலைக்கு ஆள் எடுத்து தரும் மத்த சில நிறுவனங்கள் போல முழுக்க கமர்ஷியல் நோக்கத்துல செய்யலை.
எங்ககிட்ட பதிவு செய்கிறவர்கள்கிட்ட முதல் தடவை மட்டும் ரொம்பவே குறைவான ஒரு தொகையை வாங்குறோம். பதிவுக்கட்டணம் அல்லது சர்வீஸ் சார்ஜ்னு சொல்லிக்கலாம்.
வேலை தருகிற நிறுவனங்கள்கிட்ட இருந்து நாங்க எந்தக் கட்டணும் வாங்குறதில்லை’ என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
நிர்வாக அதிகாரி, சட்ட ஆலோசகர், பி.ஆர்.ஓ உள்ளிட்ட பல பணிகளுக்கு ஓய்வு பெற்றவர்களைத் தேடுகின்றனவாம் கம்பெனிகள்.
இதில் ஹைலைட் என்னவெனில், இவர்களின் இந்த முயற்சிக்கு அரசுத் தரப்பிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவுதான்.
‘அரசின் பல துறைகளிலிருந்து ஓய்வு பெறுகிறவர்களின் பட்டியல் கிடைக்கப் பெறுவது தொடர்பாக அரசுத் தரப்பைத் தொடர்பு கொண்ட போது, அரசுத் துறைகளிலேயே பல இடங்கள்ல ஓய்வு பெற்றவர்களின் தேவை இருக்குது.
‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ உள்ளிட்ட சில அரசின் பப்ளிகேஷன் மூலம் நாங்க அறிவிப்பு கொடுத்துட்டுதான் இருக்கோம். ஆனா அது பெரிசா ரீச் பெரிய ஆகறதில்லை.
அதனால நீங்க பண்ணுங்க, உங்களுக்கு வேண்டிய உதவியைப் பண்ணித் தர்றோம்’னு சொல்லியிருக்காங்க’ என்கிறார்.
தற்போதைக்குத் தெற்கு ரயில்வே உள்ளிட்ட சில துறைகளுக்கு இவர்களின் சேவை பயன்படுகிறதாம். விரைவிலேயே மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த இருக்கிறார்களாம்.
மேலும், ‘இது எங்களுடைய முதல் முன்னெடுப்புங்கிறதால் ஓய்வு பெற்றவர்கள்ல அரசுப் பணியாளர்களை மட்டும் கவனத்துல எடுத்தோம்.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை ஓய்வு பெறுகிற வரைக்கும் பணியில் தொடர்வதே ரொம்ப அரிதானதா இருக்கு. அந்தளவு இடமாறுதல அங்க சகஜமா இருக்கு.
அதேநேரம் அங்கயும் திறைமையானவர்கள் ஓய்வு இல்லாம உழைக்கத் தயாரா இருப்பவங்களும் இருக்கறதால, அவங்களை இதுல எப்படி உள்ள கொண்டு வரலாம்னு யோசிட்டிட்டிருக்கோம்’ என்கிறார் மனோஜ்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb