
புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என தெரிவித்த இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, அதன் காரணமாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அறிவித்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக முப்படைகளின் டிஜிஎம்ஓக்கள் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்) இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, "ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்றைய இரவு பெரும்பாலும் அமைதியாக இருந்தது. சமீபத்திய நாட்களில் முதல் அமைதியான இரவு இது என கூறலாம். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை.