• May 12, 2025
  • NewsEditor
  • 0

பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன… அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்… என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

இது உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியையும், பங்குச்சந்தையும் சரிவையும் ஏற்படுத்தியதால் சில உலக நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் வரியை குறைத்தன. மேலும், அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.

இதன் விளைவாக, ஏப்ரல் 9-ம் தேதி அமலில் இருந்த பரஸ்பர வரிகளை அடுத்த 90 நாள்களுக்கு ஒத்திவைத்தார் ட்ரம்ப்.

அமெரிக்கா – சீனா

அமெரிக்கா-சீனாவிற்கு இடையேயான பிரச்னை என்ன?

பரஸ்பர வரி விதிப்பிற்குப் பிறகு, பல நாடுகள் சமாதானக் கொடியைப் பறக்கவிட்ட போதிலும், சீனா மட்டும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு “பரஸ்பர வரிக்கு பரஸ்பர வரி” என்று கூறி வரி விதித்து முறுக்கிக் கொண்டு நின்றது.

இதனால், ட்ரம்ப் சீனாவின் மீது இறக்குமதி வரிகளை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே சென்றார். மேலும், பரஸ்பர வரி ஒத்திவைப்பு சீனாவிற்கு பொருந்தாது என்று அறிவித்தார்.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே குழப்பங்கள் அதிகரித்தன. அமெரிக்கா சீனப் பொருள்களின் மீது விதிக்கும் வரி 145 சதவிகிதமாகவும், சீனா அமெரிக்கப் பொருட்களின் மீது விதிக்கும் வரி 125 சதவிகிதமாகவும் உயர்ந்து நின்றது.

தற்போது, இரு நாடுகளுக்கு இடையே மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வரிகள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளன?

தற்போது, அமெரிக்காவும் சீனாவும் இணைந்து ஜெனீவாவில் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், அமெரிக்கா சீனப் பொருட்களின் மீது விதித்த வரிகளை 30 சதவிகிதமாகவும், சீனா அமெரிக்கப் பொருள்களின் மீது விதிக்கும் வரிகளை 10 சதவிகிதமாகவும் குறைத்துள்ளது. இந்த மாற்றம் இன்னும் இரண்டு நாள்களில் அமலுக்கு வரவுள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் எடுத்துள்ள இந்த முயற்சி உலக நாடுகளால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *