
கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது ‘துடரும்’. ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது.
தற்போது கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.90 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘துடரும்’. ஒரே ஆண்டில் ’எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ என்ற இரண்டு மாபெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். மேலும், உலகளவில் ரூ.200 கோடி வசூலை ‘துடரும்’ கடந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.