
விக்ரம் மிஸ்ரி – கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்… அதிகம் பார்க்கும் முகம்!
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி. ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவக் கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கிய செய்தியாளர் சந்திப்பை தலைமை தாங்கி நடத்தியவர் இவர் தான்.
கடந்த சனிக்கிழமை (மே 10), இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த பதற்ற நிலை நிறுத்தம் குறித்து இந்தியா சார்பில் அறிவித்தது விக்ரம் மிஸ்ரி தான்.
அந்த நொடியில் இருந்து இவர் குறித்த நெகட்டிவ் கமெண்டுகளும், ட்ரோல்களும் இணையத்தில் குவியத் தொடங்கிவிட்டது.
இந்தியா – பாகிஸ்தான் பதற்ற நிலை இன்னும் அதிகரிக்கும்… பாகிஸ்தானிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்த்துகொண்டிருந்தவர்களின் கைவண்ணம் தான் இவை.
இந்தக் கமெண்டுகள் இவரோடு மட்டும் நின்றுவிடவில்லை. லண்டனில் இருக்கும் அவரது மகள் வரை இவை தொடர்கின்றன.
இதன் விளைவாக, நேற்று தனது சமூக வலைதள பக்கத்தை லாக் செய்துவிட்டார் விக்ரம் மிஸ்ரி. இவருக்கு ஆதரவாக பலரும் குரல்கொடுத்து வருகின்றனர். அவர்கள்…
AMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி:
விக்ரம் மிஸ்ரி ஒரு கண்ணியமான, நேர்மையான மற்றும் நமது தேசத்திற்காக கடினமாக அயராது உழைக்கும் ராஜதந்திரி.
நமது அரசு ஊழியர்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், நிர்வாகக் குழு அல்லது அரசியல் தலைமைகளுக்கு கீழ் எடுக்கப்படும் எந்த முடிவுகளுக்கும் அவர்களை குற்றம் சாட்டக்கூடாது.
முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா மேனன் ராவ்
இந்தியா – பாகிஸ்தான் பதற்ற நிலை அறிவிப்பிற்கு வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை ட்ரோல் செய்வது வெட்கக்கேடானது.
அர்பணிப்புள்ள ராஜதந்திரியான மிஸ்ரி இந்தியாவிற்கு தொழில்முறை மற்றும் உறுதியுடன் சேவை செய்துள்ளார். அதற்கு, அவரையும், அவரது மகளையும் இழிவுபடுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த நச்சு வெறுப்பு நிறுத்தப்பட வேண்டும். நமது ராஜதந்திரிகளுக்கு பின்னால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ட்ரோல் செய்பவர்களை கிழித்து எறிய வேண்டும்.
ஐ.ஏ.எஸ் அசோசியேஷன்
ஐ.ஏ.எஸ் அசோசியேஷன் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்திற்கு துணை நிற்கிறது.
நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் மீது தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் மிகவும் வருந்தத்தக்கவை.
பொது சேவையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

இது சரியான அணுகுமுறையா?
ஒரு இக்கட்டான சூழலில், இந்திய அரசின் முகமாக திகழ்வது பெரும் கடினமான விஷயம் ஆகும். இந்த சமயத்தில் அவர் தைரியமாகவும், நுட்பமாகவும், அறிவார்ந்தும் இந்த சூழலை அழகாக அணுகி, மக்களை பயம்கொள்ள வைக்காமல் அனைத்து செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்தார்.
இந்தப் பதற்ற நிலை நிறுத்தத்தை விக்ரம் மிஸ்ரி தனி ஆளாக எடுத்த முடிவு அல்ல. இது இரு நாடுகளும், இரு நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் இன்னும் பல அதிகாரிகளும் கூடி எடுத்த முடிவு.
இந்த அறிவிப்பை அறிவித்ததால் மட்டும் விக்ரம் மிஸ்ரியை ட்ரோல் செய்வது சரியல்ல. அதுவும் அவரது குடும்பம் வரை இந்த ட்ரோல்கள் நீள்வது மிகவும் தவறானது.
இதை தொடர்ந்து வரும் மக்கள் உடனடியாக இந்த செய்கையை நிறுத்த வேண்டும் என்கின்றனர் சமூகநல ஆர்வலர்கள்.