
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று 30-க்கும்மேற்பட்டோர், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தலைப்பைக் கோரி விண்ணப்பித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் உத்தம் மகேஸ்வரி என்ற இயக்குநர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் படம் தொடங்க இருப்பதாக அறிவித்தார். அதற்கான போஸ்டரையும் ரிலீஸ் செய்தார். நிக்கி விக்கி பாக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினீயர் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.