
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நம்ரதாவிற்கு போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக பாலகிருஷ்ணா என்பவர் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி, போதைப்பொருளை டாக்டர் நம்ரதாவிற்கு டெலிவரி செய்த பாலகிருஷ்ணாவை கைது செய்தனர். டாக்டரிடமிருந்து 53 கிராம் கொகைன் போதைப்பொருள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் நம்ரதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் மும்பையை சேர்ந்த வன்ஸ் தக்கர் என்பவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் கொகைன் போதைப்பொருளை ஆர்டர் செய்திருந்தது தெரிய வந்தது.
அதற்கான பணம் ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்து இருந்தார். இதையடுத்து வன்ஸ் போதைப்பொருளை கூரியர் மூலம் அனுப்பி இருந்தார். அதனை பாலகிருஷ்ணா டெலிவரி செய்வதற்காக எடுத்து வந்தபோது பிடிபட்டார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் நம்ரதா போதைப்பொருளுக்காக ரூ.70 லட்சத்தை செலவு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
நம்ரதா மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போதைப்பொருளை சப்ளை செய்த மும்பையை சேர்ந்த வன்ஸ் என்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கூரியர் மூலம் கடத்தி வரப்படுவது அதிகரித்து இருக்கிறது.