
மலையாள நடிகரான விநாயகன், தமிழில், சிலம்பாட்டம், மரியான், காளை, திமிரு, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ள விநாயகன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் ஏற்கெனவே கைதும் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காகக் கொல்லம் சென்ற விநாயகன், அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் பிரச்சினை செய்துள்ளார். அங்குள்ள ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விநாயகனை அஞ்சலுமூடு போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர் போலீஸ்காரர்களிடமும் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.