• May 12, 2025
  • NewsEditor
  • 0

‘விராட் கோலி ஓய்வு!’

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்காத முடிவு இது. எப்படியும் விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகளாவது ஆடுவார் என்பதுதான் அனைவரின் அனுமானமாகவும் இருந்தது. அப்படியிருக்க கோலியிடமிருந்து வந்திருக்கும் ஓய்வு முடிவு ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ். கோலியின் இந்த முடிவுக்கு பின்னால் நிறைய காரணங்களும் இருக்கவே செய்கிறது.

விராட் கோலி

‘ஓய்வின் பின்னணி’

மேலோட்டமாக பார்க்கையில் விராட் கோலியின் டெஸ்ட் ஃபார்மின் மீதுதான் அனைவரும் குறை சொல்வார்கள். அதில் நியாயமும் இருக்கிறது. கடைசியாக விராட் கோலி ஆடிய பார்டர் கவாஸ்கர் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 190 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதில் ஒரு சதமும் அடக்கம். ஆக, 8 இன்னிங்ஸ்களில் அவர் சோபிக்கவே இல்லை.

2024 மற்றும் 2025 இல் இதுவரை மொத்தம் 21 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கிறார். 440 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 20 ஐ சுற்றித்தான் இருக்கிறது. ஆக, கோலியின் பார்ம் மோசமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், கோலி ஓய்வை நோக்கி நகர அதுமட்டுமே காரணமாக இருக்காது.

‘கோலி vs பிசிசிஐ’

கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையேயான முந்தைய கால உரசல் அவரின் மனதில் இன்னமும் அப்படியே இருப்பதாகவே தோன்றுகிறது. 2020-21 காலக்கட்டம். கோலிக்கும் பிசிசிஐக்கும் போதாதக் காலக்கட்டமாக இருந்தது.

Virat Kohli
Virat Kohli

பிசிசிஐ கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க விரும்புகிறது என ஒரு செய்தி அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அதை உணர்ந்த கோலி அவராகவே முன் வந்து டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும், பிசிசிஐ விடவில்லை. 2021 டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடே கோலியை ஓடிஐ போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கியது. அவர் நீக்கப்பட்ட விதம் இன்னும் சர்ச்சையானது.

நாங்கள் விராட் கோலியிடம் கலந்தாலோசித்துதான் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினோம் என பிசிசிஐ தரப்பில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. என்னிடம் யாரும் எதுவும் பேசவில்லை என கோலி மொத்தமாக போட்டுடைத்தார். கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்காக ரொம்பவே தாமதமாகத்தான் நன்றி என சொல்லி பிசிசிஐ ட்வீட் செய்தது.

Virat Kohli
Virat Kohli

கிட்டத்தட்ட பிசிசிஐ யால் கோலி அவமதிப்பு செய்யப்பட்டார். இதன்பிறகுதான் அவரே முன் வந்து டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.

பிசிசிஐயின் மத்தியில் விராட் கோலி உச்சபட்ச அதிகாரத்தோடு இருந்த காலக்கட்டமும் இருந்தது. அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அவருக்கும் அப்போதைய கேப்டன் கோலிக்கும் செட் ஆகவில்லை. கோலி பிடிக்கவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அனில் கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்கியது.

Virat Kohli
Virat Kohli

அந்தளவுக்கு கோலிக்கு அதிகாரம் இருந்தது. அவர் விரும்பிய நபர்களை அவரால் அணிக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு அவரிடம் சுதந்திரம் இருந்தது. அப்படியிருந்த கோலியை வேண்டாமென முடிவு செய்த போது வம்படியாக ஓரங்கட்டியது பிசிசிஐ.

இப்போது ரோஹித்தின் கதையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால், பிசிசிஐ அவருக்கு எதிராக நிற்கிறது. அதனால்தான் அவரே ஓய்வை அறிவித்துவிட்டு விலகினார்.

‘கோலியின் நெருடல்!’

கோலி இதற்குதான் தயக்கப்படுகிறார். கோலி இரண்டையும் பார்த்துவிட்டார். பிசிசிஐ அவரை கொண்டாடியும் தீர்த்திருக்கிறது. அவமதிக்கவும் செய்திருக்கிறது. 2020-21 இல் நடந்தது போன்ற அவமதிப்பை கோலி மீண்டும் எதிர்கொள்ள விரும்பவில்லை. அதாவது தன்னுடைய ஓய்வு முடிவு தன்னுடைய கையிலேயே இருக்க வேண்டும் என கோலி விரும்புகிறார். மீண்டும் பிசிசிஐயால் பந்தாடப்படுவதை அவர் விரும்பவில்லை.

Virat Kohli
Virat Kohli

மேலும், டெஸ்ட்டை விட ஓடிஐதான் விராட் கோலிக்கு விருப்பமான பார்மட். ரெக்கார்டாகவுமே ஓடிஐதான் கோலியின் பலமே. 2027 இல் தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் ஓடிஐ உலகக்கோப்பை வர ஆட வேண்டும். அந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கோலியின் நோக்கம். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம் ஓடிஐக்களில் அதிகம் கவனம் செலுத்த முடியும் என்று கூட கோலி நினைத்திருக்கலாம்.

கோலியின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி பிசிசிஐ கேட்டிருந்தது. கோலி அதையும் மறுதலித்திருக்கிறார். மேலும், தன்னுடைய ஓய்வு அறிவிப்பிலும் பிசிசிஐ யை குறிப்பிட்டு விராட் கோலி எதையும் பதிவிடவில்லை.

Virat Kohli
Virat Kohli

என்னுடைய டெஸ்ட் கரியரை எப்போதும் ஒரு சிறு புன்னகையோடு திரும்பிப் பார்த்துக் கொள்வேன் என விராட் கோலி கூறியிருக்கிறார். இதற்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. பிசிசிஐயுடன் மீண்டும் ஒரு மனமாச்சர்யர்த்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதே கோலி சொல்ல வரும் செய்தியாக எடுத்துக்கொள்ள முடிகிறது.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *