
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார்.
அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாகவும் ராஜாந்திர ரீதியாகவும் காஷ்மீரின் பல ஆண்டு கால உழைப்பை இல்லாமல் ஆக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ள இந்த சம்பவம், சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீரை தூக்கிப்பிடிக்க அனுமதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“நாங்கள் இந்த நிலைக்கு வருவோம் என எதிர்பார்க்கவே இல்லை. இரத்தம் சிதறும் இந்த துன்பத்தில் வந்து நிற்கிறோம். எல்லாமும் மாறிவிட்டது. கொந்தளிப்பும் குழப்பமும் அதிகரித்துவிட்டது.” எனக் கூறியுள்ளார் ஒமர் அப்துல்லா.
தீவிரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பேசுகையில் அவர், “ஆண்டின் இந்த நேரத்தில் எங்கள் மாநிலம் சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருக்க வேண்டும். தினமும் 50-60 விமானங்கள் விமான நிலையத்தில் இயக்கப்படும். வருமானம் பெருகும், குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருப்பார்கள்.

இப்போது எல்லாமும் காலியாக இருக்கிறது. பள்ளிகளும் விமான நிலையங்களும் மூடியிருக்கின்றன” என்றார்.
“நான் எதுவும் மாறவில்லை எனக் கூறினாலும், பாகிஸ்தான் திட்டமிட்டு மீண்டும் பாகிஸ்தானை சர்வதேச பிரச்னையாக்கியிருக்கிறது. இதில் அமெரிக்கா நடுவராக, உரையாசிரியராக பாத்திரம் வகிக்க ஆர்வமாக இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
“கடந்த சில நாள்களாக நடந்த தீவிர சண்டைக்குப் பிறகு போர் நிறுத்தம் அவற்றை நிறுத்தியிருக்கிறது. ஆனால் முதல் நாளிலேயே அதை மீறியுள்ளனர். வரும் இரவுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காண நாங்கள் காத்திருக்கிறோம்” எனப் பேசியுள்ளார்.