
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தங்க நகைகள் உள்ளிட்ட பழமையான பொக்கிஷங்கள் உள்ளன. எனவே 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கோயில் வளாகம் உள்ளது.
கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் பாரம்பர்ய முறையிலான ஆடைகள் அணிந்து செல்வது மட்டும் அல்லாது பாதுகாப்பு காரணங்களுக்காக மொபைல்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்றவைகள் கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கோயிலுக்குள் செல்லும் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தியே அனுமதிக்கப்படுகின்றனர்.
காணாமல் போன ஆபரணம்
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி லாக்கரில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது சுவாமி அலங்காரத்துக்கு பயன்படுத்தும் சுமார் 107 கிராம் எடை கொண்ட 13 பவுன் தங்க கம்பி போன்ற ஆபரணம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் இணைந்து கோயில் வளகம் முழுவதும் நேற்று (மே 11) தேடுதல் வேட்டை நடத்தினர். மாலையில் கோயில் வளாகத்திலேயே தங்கம் கண்டுபிடிக்காப்பட்டதாக போலீஸார் அறிவித்தனர்.
இதுகுறித்து திருவனந்தபுரம் மாநகர போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோயில் முழுவதும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் உதவியுடனும், மேனுவலாகவும் சோதனை நடத்தினோம். அதில் கோயில் லாக்கரில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் உள்ள மதில் சுவர் பக்கத்தில் மணலில் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் திருடப்படவில்லை. பையில் எடுத்துச் சென்றபோது தவறுதலாக தொலைந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம். நகையை லாக்கரில் வைக்கவும் மறுபடியும் எடுத்துச்செல்லவும் 7 முதல் 10 பேர்கள் வரை செல்வார்கள். நகை வைக்கப்பட்ட பையில் இருந்து விழுந்ததா என்பது பற்றி விசாரித்துவருகிறோம்.

லாக்கர் மிகவும் பாதுகாப்பானது, அங்கு வைக்கப்பட்ட பொருட்கள் அப்படியேத்தான் உள்ளன. லாக்கர் அறையின் இரு வாசல்களிலும் எப்போதும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அங்கு யாரும் அத்துமீறி நுழைய வாய்ப்பு இல்லை.
நகை 7-ம் தேதி காணாமல் போனதா அல்லது 10-ம் தேதி காணாமல்போனதா என்பதுகுறித்து தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறோம். தங்கம் மீட்கப்பட்ட தரைப் பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்துக்கு கடல் மணல் நிரப்பப்பட்டுள்ள இடமாகும். அதனால் அந்த தங்கம் வேறு யாருடைய கண்ணிலும் தென்படவில்லை. மேலும், இது திருட்டு முயற்சியா என்ற கோணத்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.