
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நேற்று இந்திய ராணுவத்தினர் விளக்கினார்கள். அதன் பின்னர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதையும் விளக்கினார்கள்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, “இந்தியா பாகிஸ்தானுக்கு கடந்த 7-ம் தேதி கொடுத்த பதிலடியில் முரிட்கே, பஹவல்பூரில் உள்ள தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படை மூலம் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு துல்லியமாக நடத்தப்பட்டது. நமக்கு தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறி… பாகிஸ்தான் ராணுவம் உள்ளிட்ட வேறு எந்தப் பாகிஸ்தான் கட்டமைப்பும் குறி அல்ல.
நாம் தடுத்துவிட்டோம்..!
அன்று மாலை பாகிஸ்தான் ராணுவம் நமது எல்லைக்குள், அதாவது ராணுவ தளவாடங்கள், பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் போன்ற இடங்களில் ஆளில்லா போர் விமானங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை ஏவியது. பெரும்பாலானவற்றை நாம் தடுத்துவிட்டோம். சில போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் தரையிறங்கினாலும், பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நாம் அங்கே தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தோம். ஆனால், அவர்களோ நமது ராணுவ தளவாடங்களையும், பொதுமக்களையும் குறிவைத்தனர்.
இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் உள்ள ரேடார்களைத் தாக்கியது.
அப்போதும், நமது இலக்கு தீவிரவாதிகள் மட்டுமே என்பதில் தெளிவாக இருந்தோம். கடந்த 8, 9 தேதிகளில் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்கள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தின. அவை ஶ்ரீநகர் முதல் நல்லியா வரை தாக்குதல் நடத்தின.
ஆனால், அவை அதன் இலக்குகளைச் சென்றடையக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். எதிரியின் இந்தத் தாக்குதல் மூலம் அவர்களுக்கு சண்டை வேண்டும் என்பது தெளிவானது.
அதனால், நாங்கள் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களைத் தாக்கினோம்.
லாகூரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், எதிரிகள் அந்த வழித்தடத்தில் பயணிகள் விமானத்தையும் இயக்க அனுமதி வழங்கியிருந்தனர். இந்த அனுமதி அவர்கள் நாட்டு விமானத்துக்கு மட்டுமல்ல, இந்திய பயணிகள் விமானத்துக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய தவறு” என்று விளக்கினார்.