• May 12, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன்.  என்றாவது ஒன்றிரண்டு நாள்கள் அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.  தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சரியான பழக்கம்தானா… எத்தனை பழங்கள் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார் கோயம்புத்துரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து என சத்துகளின் பெட்டகம் என்றே வாழைப்பழத்தைச் சொல்லலாம். இதிலுள்ள கார்போஹைட்ரேட்டின் மூலம் உடலுக்குத் தேவையான கலோரி கிடைத்துவிடும்.

வாழைப்பழத்தில் புரதச்சத்து கிடையாது. உடலின் கட்டமைப்புக்கு புரதச்சத்து மிக மிக முக்கியமானது.  உடலின் நோய் எதிர்ப்பாற்றல், திசுக்களைப் பழுதுபார்த்தல், தசை வளர்ச்சி,  எலும்புகளின் ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் புரதச்சத்து மிக அவசியம்.  கொழுப்புச்சத்தானது, உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, கொழுப்பில் கரையும் ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ள உதவும்.  தவிர, ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு அவசியம். ஆனால், வாழைப்பழத்தில்  கொழுப்புச்சத்தும் கிடையாது. எனவே, வாழைப்பழத்தை முழுமையான உணவாக நினைத்துச் சாப்பிட வேண்டாம்.

வாழைக்காய், வாழைப்பழமாக மாறும்போது, அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரைச் சத்தாக மாறுகிறது.

வாழைக்காய், வாழைப்பழமாக மாறும்போது, அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரைச் சத்தாக மாறுகிறது. எனவே, வாழைப்பழமாக உட்கொள்ளும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆற்றலானது சர்க்கரைச் சத்திலிருந்து பெறப்படுவதாக அமையும். போதுமான அளவு புரதச்சத்தோ, கொழுப்புச்சத்தோ இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது, அது உடல்பருமனுக்கும், ரத்தச் சர்க்கரை சமநிலையின்மைக்கும் காரணமாகும்.   

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும்  சமச்சீரான பல்வேறு விதமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். பசியோடு இருக்கும்போதோ, உணவு நேரத்தில் வழக்கமான உணவுக்கான மாற்றாகவோ வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறையுமே தவிர, சரிவிகித சத்துகள் கிடைக்காது. 

தினம் வாழைப்பழம் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தில் எல்லோரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஸ்மூத்தி செய்யும்போது வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ, செய்த பிறகோ வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாகவும்  கொடுக்கலாம்.

மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம்.

சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே சாப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட் உடலில் சேர்ந்திருக்கும். அந்நிலையில் வாழைப்பழத்தின் மூலம் கூடுதல் கார்போஹைட்ரேட் உடலில் சேரும். நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைப்பழத்தைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. மலச்சிக்கலைப் போக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் இதை எடுத்துக்கொள்வோர், மேற்குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம்.

ஆரோக்கியமான நபர், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். பசி நேரத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து, இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைத்துவிடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *