
கடலூர் / மேட்டூர்: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் நேற்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
விபத்தின்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் காப்பர் வயர் உட்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.