
புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும் இந்திய விமானப்படை இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை இந்திய விமானப்படை (IAF) துல்லியத்துடனும் தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுடன் இணைந்து, விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை வழங்கப்படும். ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைவரையும் இந்திய விமானப்படை கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.