
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் காசியாபாத்தில் கெளரவ் குமார் (23) என்பவரையும் காரில் ஏற்றிக்கொண்டனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கார் மீரட் அருகில் சென்ற போது 3 ஆண்களும் 19 வயது பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அப்பெண் அவர்களைத் திட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை 3 ஆண்களும் சேர்ந்து ஓடும் காரிலிருந்து வெளியில் தள்ளிவிட்டனர். அந்நேரம் அந்த வழியாக வந்த மற்றொரு கார் அப்பெண் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து காரில் இருந்த 17 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை நேரத்தில் அப்பெண் அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் கெளரவ் மற்றும் சந்தீப் ஆகியோரை பிடிக்கச் சென்றபோது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் போலீஸார் சரியாக கண்காணிக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.