• May 11, 2025
  • NewsEditor
  • 0

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது.

அடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த, இந்தியா அதை முறியடித்தது.

அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிக்க, பிறகு இந்தியாவும் மோதலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரதமர் மோடி – டொனால்ட் ட்ரம்ப்

இருப்பினும், அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே, இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாகத் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி, “பாகிஸ்தான் தனது நாட்டை இந்தியாவுக்கெதிரான தீவிரவாதத்துக்குப் பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நிரந்தர அமைதி இருக்காது.

மோதல் நிறுத்தப்படுகிறதோ இல்லையோ, பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை நாம் விடக்கூடாது.

வெளிப்புற ஆக்கிரமிப்புக்கு எதிராக அரசுக்கும், நம் ஆயுதப்படைக்கும் எப்போதும் நான் ஆதரவாக இருந்து வருகிறேன். இனியும் அது தொடரும். நமது ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கு நன்றி.

மேலும், ராணுவ வீரர் எம். முரளி நாயக், ஏ.டி.டி.சி. ராஜ் குமார் தாபா என மோதலின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.

ஒவைசி
ஒவைசி

இந்த மோதல் நிறுத்தம் எல்லையில் வாழும் மக்களுக்கு சற்று ஓய்வைத் தரும். இந்தியா ஒன்றுபடும்போது வலிமையானது என்பதையும், நமக்குள்ளே சண்டை போட்டால் எதிரிகள் பயனடைவார்கள் என்பதையும் கடந்த இரண்டு வாரங்களில் இந்தியர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதேசமயம் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன, அவற்றை அரசு தெளிவுபடுத்தும் என்றும் நம்புகிறேன்.

1. வெளிநாட்டு அதிபரைவிட நமது பிரதமர் இந்த மோதல் நிறுத்தத்தை அறிவித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 1972 சிம்லா ஒப்பந்தம் முதல் மூன்றாம் தரப்பு தலையீட்டை எப்போதும் நாம் எதிர்க்கிறோம். அப்படியிருக்கும்போது இப்போது ஏன் இப்படி? காஷ்மீர் பிரச்னை சர்வதேச மயமாக்கப்படக்கூடாது. ஏனெனில் அது நம் உள்நாட்டு விஷயம்.

2. எதற்காக நடுநிலை நாட்டுடன் பேச நாம் ஒப்புக்கொள்கிறோம்? இந்தப் பேச்சுவார்த்தைகளின் அஜெண்டா என்ன? பாகிஸ்தான் தனது நாட்டை தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தாது என உத்தரவாதம் அளிக்கிறதா?

3. தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதிலிருந்து பாகிஸ்தானைத் தடுக்கும் இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததில் நம் இலக்கு மோதல் நிறுத்தமா அல்லது மற்றொரு தீவிரவாதத் தாக்குதலைக் கனவுகூட காணாத நிலைக்கு பாகிஸ்தானைக் கொண்டுவருவதா?

4. பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழு க்ரே லிஸ்டில் (FATF grey list) சேர்க்கும் வேலையை நாம் தொடர வேண்டும்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *