• May 11, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும்.  வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா?


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

வியர்வைக்கென தனி வாடையே கிடையாது. அதாவது நாம் நினைக்கிற மாதிரி வியர்வைக்கென  கெட்ட வாடை என ஒன்று கிடையாது. வியர்வையோடு பாக்டீரியா  அல்லது பூஞ்சைக் கிருமிகள் சேரும்போதுதான் அதன் கெட்ட வாடை வருகிறது. 

பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். டியோடரன்ட் என்பது வியர்வையின் வாடையை தன் வாடையின் மூலம்  மறைக்கும். 

ரோல் ஆன் என்பது அதில் சேர்க்கப்படும் அலுமினியம் கூற்றைப் பயன்படுத்தி  வியர்வை வெளியேறாதபடி, வியர்வை சுரப்பிகளை மூடிவிடும். பட்டு ஜாக்கெட் போன்ற உடைகளை  அணியும்போது வியர்வை கசிந்து, அதன் அடையாளம் உடையில் தெரியாமலிருக்க ரோல் ஆன் உபயோகிக்கலாம்.

இவற்றையெல்லாம் உபயோகிப்பது சரியா, தவறா என்றால்  இவற்றில் வாசனைக்காகப் பயன்படுத்தும் கூறுகள் நிச்சயம் சருமத்தை பாதிக்கும். அதனால்தான் அதிக வாசனை உள்ள பவுடர், சோப் போன்றவற்றைக்கூட உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கான்டாக்ட் அலர்ஜி என்கிற ஒவ்வாமைக்கு அதுதான் பிரதான காரணமே.

பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது என்பது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும்.

மாநிற சருமம் கொண்ட நம்மைப் போன்ற தென்னிந்தியர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகம். உதாரணத்துக்கு அக்குள் பகுதியில் வியர்வைக்காக உபயோகிக்கும் இந்த வாசனைப் பொருள்களால், அந்தப் பகுதி அளவுக்கதிகமாக கருத்துப்போலாம்.

‘அப்படியென்றால் வியர்வை நாற்றத்தை மறைக்க எதைத்தான் உபயோகிப்பது’ என்ற கேள்வி வரலாம். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட டஸ்ட்டிங் பவுடர்கள்   கிடைக்கின்றன. இந்த பவுடர்கள்  பாக்டீரியாவோ, பூஞ்சையோ வளரவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, ஈரப்பதம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் கேட்ட எல்லாவற்றையும்விட டஸ்ட்டிங் பவுடரே சருமத்துக்குப் பாதுகாப்பானது. தரமான பிராண்ட் தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *