• May 11, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது.

அதன்பிறகு, எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் கண்டங்கள் ஆகியவை எதையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாக நிற்காமல் உக்ரைன் மீது போர் நடத்திவருகிறது ரஷ்யா.

இந்த நிலையில்தான், போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யா – உக்ரைன் போர்

இது குறித்து புதின், “மோதலுக்கான மூல காரணங்களை நீக்குவதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்குமான முயற்சியாக இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ரஷ்யா முன்மொழிகிறது.

2022-ல் உக்ரைன்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது, ரஷ்யா அல்ல. எனவே, எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது.

ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)
ஜெலன்ஸ்கி (உக்ரைன்) – புதின் (ரஷ்யா)

ஆனால், மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின் பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ரஷ்யா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், எங்களின் போர் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

முன்பு, இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில், 5 முறை ரஷ்ய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன்” என்று தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்த கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *