
மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும் மந்தமால் என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் கூட்டாக காட்டுக்குள் பீடி தயாரிக்க பயன்படும் இலைகளை பறிக்க நேற்று காலை வனப்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் நேற்று மாலை காட்டிற்குள் இலைகளை பறித்துக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு புலி ஒன்று வந்தது. அவர்கள் மீது பாய்ந்த புலி அவர்களை தாக்க ஆரம்பித்தது. பெண்கள் புலியிடமிருந்து தப்பித்து ஓட முயன்றனர். ஆனால் அவர்கள் மீது புலி பாய்ந்து தாக்கியது.
இதில் காந்தாபாய், அவரது மருமகள் சுபாங்கி மற்றும் சரிதா(50) ஆகியோர் புலி தாக்கியதில் அவர்கள் இறந்து போனார்கள். மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார். ஒரே நேரத்தில் புலி மூன்று பேரை அடித்து கொன்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட புலியை உடனே பிடிக்கவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதோடு காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.