
பாகிஸ்தானுடனான போர் சூழலில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தேசிய கொடியேந்தி அணிவகுத்துச் சென்று, இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தானின் அத்துமீறல்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சென்னை, கடற்கரைச் சாலையில் 'இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் பேரணி' நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் பேரணிக்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. அதன்படி, 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள், பெண்களுக்கான ஒப்பனை அறை உட்பட 16 இடங்களில் கழிப்பறை வசதிகள், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, 10 இடங்களில் மருத்துவ முகாம், 15 ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.