
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் `டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மே.1-ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர்.
இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நகைச்சுவை பாணியில் உணர்வுப்பூர்வமாக கூறியிருந்தனர். ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ. 20 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவினரை அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாரட்டியிருக்கிறார்.
இது குறித்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்களை அழைத்து எங்கள் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் குறித்த உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் சார்… உங்கள் அன்பான வார்த்தைகளும் கருத்துகளும் உண்மையிலேயே எங்களுக்கு நிறைய மதிப்பளித்தது.
உங்களின் கருத்துக்களைக் கேட்பது நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும் ஒரு குழுவாக, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற தருணங்கள் எங்களை இன்னும் அழகான, இதயப்பூர்வமான கதைகளைப் பாடமாக்கத் தூண்டுகிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.