
இந்தியா – பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்ற போர்களில் எல்லாம் இறுதியில் பாகிஸ்தான் பணிந்ததே வரலாறாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினையின் போது இந்து மன்னர் ஹரி சிங் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையலாமா அல்லது இந்தியாவுடன் இணையலாமா என முடிவெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்தியா பக்கம் சென்றுவிடுவார் என பாகிஸ்தான் பயந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
பழங்குடியின முஸ்லிம் படைகள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் காஷ்மீரின் சில பகுதிகளை கைப்பற்றினர். அதுவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர். இந்தியா – பாகிஸ்தானுடனான் முதல் போர் கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகள் இடையே காஷ்மீர் விவகாரம் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன்பின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரத்தில் தலையிட்டு கடந்த 1948-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி எல்லை கட்டுப்பாட்டு பகுதி உருவாக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே சண்டை நிறுத்தம் கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 1-ம் இரவு ஏற்பட்டது. காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் இந்திய கட்டுப்பாட்டில் வந்தன.