
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் அந்நாட்டு மக்களுக்காக வீடியோவில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதாவது, ‘பாகிஸ்தான் ஒரு மரியாதைமிக்க மற்றும் பெருமைமிக்க நாடு என்பதை நீங்கள் மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறீர்கள். நம்முடைய தேசத்தின் சுதந்திரத்துக்கு யாராவது சவால்விடும்பட்சத்தில் அதை எதிர்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வோம். கடந்த சில நாள்களில் நம்முடைய எதிரி செய்திருப்பது கோழைத்தனமான மற்றும் அவமானமான செயல்.

பஹல்காம் தாக்குதலை இந்தியா ஒரு காரணமாக சொல்கிறது. ஆனால், அதில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமே சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்தியா நம் மீது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது. அவர்களால் முடிந்த அளவுக்கு நம் மீது தாக்குதல் நடத்த முற்பட்டார்கள்.

அப்பாவி மக்களை தாக்கினார்கள். மசூதிகளை தாக்கியிருக்கிறார்கள். நம்முடைய நாட்டின் மதிப்புமிக்க இடங்களையெல்லாம் அவர்கள் தாக்கி அழிக்க நினைத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுத்தோம். நாம் வரலாறு படைத்திருக்கிறோம். வரலாறு நம்மை நியாகப்படுத்தும். நாம் வென்றிருக்கிறோம்.’ என்றார்.