
புதுடெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்" என்று தெரிவித்தார்.