
புதுடெல்லி: போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமாண்டர் ரகு நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு கமாண்டர் ரகு ஆர் நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், "வெளியுறவுச் செயலாளர் கூறியதுபோல இந்தியா – பாகிஸ்தான் இடையே கடல், வான் மற்றும் நிலம் என அனைத்து தளங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைகள் இந்தப் புரிதலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.