
இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளும் இந்த மோதல் போக்கை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டன என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் இரு நாடுகளும் வான், கடல், தரை வழித் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், இந்தியா போர் நிறுத்த முடிவை அறிவித்த சிறிது நேரத்திலேயே அரசு மாநாட்டில் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், “இன்று எட்டப்பட்ட புரிதலை நாங்கள் கடைப்பிடிப்போம். அதே நேரத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாகத் தயாராகவும், எப்போதும் விழிப்புடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான முயற்சியும் பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு தீவிரத் தாக்குதலுக்கும் ஒரு தீர்க்கமான பதிலை கொடுப்போம். தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் தொடங்க நாங்கள் முழுமையாக செயல்பாட்டு ரீதியாக தயாராக இருக்கிறோம்” என்றார்.