
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவிவரும் சூழலில், சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தவிர, பிற நிகழ்ச்சிகளில் சிவில் பாதுகாப்பு விமானத் தாக்குதல் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊடக சேனல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு காவல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவில் பாதுகாப்புச் சட்டம் 1968 பிரிவு 3 (1) (w) (i)-ன் அதிகாரத்தின் படி, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தவிர, தங்களின் பிற நிகழ்ச்சிகளில் சிவில் பாதுகாப்பு விமானத் தாக்குதல் சைரன் ஒலியைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.