
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றாலும், அவரது அரசு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற நிலை குறித்து, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொடர்ந்து இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன. இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு நாடுகளும் பொதுவான அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கும் நன்றி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.