
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 10) இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்களின் உடனடி வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பேரணியல் கலந்துகொள்ளும் பொதுமக்களும், தங்களுக்குத் தேவையான குடிநீர் கொண்டுவருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர்புரிந்துவரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் கடற்கரைச் சாலையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்கள்.