• May 10, 2025
  • NewsEditor
  • 0

நாளை ஞாயிற்றுக்கிழமை (11-5-2025) சித்ரா பௌர்ணமி. இந்த நன்னாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனும் பேறும் கிடைக்கும் என்கிறது தலவரலாறு. எனவே, நாளை இரவு 8.53 மணி முதல் மறுநாள் திங்கட்கிழமை இரவு 10.48 மணி வரை கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம். சித்ரா பௌர்ணமியில் சித்தர் பெருமக்கள் அனைவரும் வெவ்வேறு ரூபங்களில் பூமிக்கு வந்து அருள்வார்கள் என்று அகத்தியர் நூல்கள்களும் சொல்கின்றன. இதனால், இந்நாளில் சித்தர் வழிபாடு, சித்தர் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடுவது மன அமைதியையும், உடல் பலத்தையும் அருளும். திருவண்ணாமலையில் சித்ரகுப்தர் – விசித்ரகுப்தர் ஆகிய இருவருக்கும் சந்நிதி உள்ளன.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமிக்கு 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்று கணித்திருக்கிறது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம். பக்தர்களின் வசதிக்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் 20 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் 73 கார் பார்க்கிங் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் திருவண்ணாமலை மாவட்டக் காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப் லைன் எண் 93636-22330க்கு `Hi’ அல்லது `Hello’ என ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பி, தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங் இடங்களுக்குச் செல்வதற்கான கூகுள் மேப் லிங்க்கை பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் தங்கள் பாதையில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்.

இதையடுத்து, பக்தர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது காவல்துறை. “தயிர், மோர் பானம் வழங்குதல், விபூதி பூசுதல் அல்லது ஆசீர்வதித்தல் போன்ற பெயர்களில் மிரட்டி அல்லது ஏமாற்றிப் பணம் பறிப்பது குற்றமாகும். கிரிவலப் பாதையில் பாதுகாப்பு கண்காணிப்புப் பணிக்கு குற்றத் தடுப்பு அதிரடி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் செய்வோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

கோயில் 4 கோபுரங்களின் முன்பும், கிரிவலப்பாதையிலும் விளக்கு வைக்க அதற்கென அனுமதிக்கப்பட்ட அகண்ட கொப்பரையில் மட்டுமே பாதுகாப்பாக ஏற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சாலையின் தரையில் விளக்கு வைக்கக் கூடாது. கிரிவலப் பாதையில் மாடுகளை விடுவது, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பக்தர்கள் மாடுகளுக்கு அகத்திக் கீரை அல்லது பிற உணவுகளையும் வழங்க வேண்டாம். அனுமதி இல்லாமல், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடங்களில் அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்னதாகவே அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம்.

குழந்தைகள், முதியவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க பக்தர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். தங்கள் செல்போன்கள், ஆபரணங்கள், பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். அவற்றை அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருள்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

உதவிக்கு அருகிலுள்ள `May i Help You’ காவல் மையத்தை அணுகலாம். அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்களை 11-ம் தேதி காலை 6 மணி முதல் 13-ம் தேதி காலை 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையம் : 04175-222303

உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்: 94981-00431

அவசர உதவி: 100

மாவட்ட காவல் சித்ரா பௌர்ணமி கட்டுப்பாறை அறை: 91596-16263.

கிரிவலப் பாதையில் உள்ள நீர் நிலைகளில் இறங்க வேண்டாம். கிரிவலப் பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறைகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. குடிநீரை வீணாக்காமல் உபயோகிக்கவும். 4 கோபுரங்கள் அருகிலும் கிரிவலப் பாதையிலும் காலணிகளை விட வேண்டாம். காலணிகளை அதற்கென உள்ள காலணி பாதுகாக்கும் மையங்களில் அல்லது கடைகளில் விடவும். கிரிவலப் பாதையில் தற்காலிக கடைகள் அமைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் சத்தமுள்ள ஒலி எழுப்பிகள், சவுண்ட் ஹார்ன் விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது குற்றமாகும். கிரிவலப் பாதையில் உள்ள நிரந்தர கடைகளிலும் ஒலிப்பெட்டி வாயிலாக வரும் விளம்பர ஒலிகள் மூலம் பக்தர்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது.

கிரிவலப் பாதையில் தற்காலிக கடைகள் அல்லது தற்காலிக கூடாரங்கள் அமைத்து அடுப்பில் சமையல் செய்யும் நடவடிக்கைகள் தடைச் செய்யப்பட்டுள்ளன. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமையல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும். கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் காட்டுப் பகுதிக்குள் நுழைவதும், மலையேற முயற்சிப்பதும் குற்றம். அப்படிச் செய்வோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவ முகாம்களில் உதவி பெறலாம் அல்லது அருகிலுள்ள `May i Help You’ காவல் உதவி மையத்தை அணுகலாம்’’ என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *