
ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும் விலையுயர்ந்த மாம்பழமாக கருதப்படுகிறது.
இந்த மாம்பழம் காய்க்கும் போது பச்சை நிறத்தில் இருக்கும். பழுக்கும் போது சிவப்பு நிறத்தில் மாறும். இதனால் மியாசாகி மாம்பழத்தை “சூரியனின் முட்டை” என்று கூறுவார்களாம்.
மியாசாகி மாம்பழங்கள் மற்ற மாம்பழங்கள் போல பயிரிடப்படுவதில்லை, பிரத்யோகமாக அமைக்கப்பட்ட பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்டு ஒவ்வொரு பழமும் வலையில் கட்டப்பட்டு, கனிந்தவுடன் தானாக விழும் வரை மரத்திலேயே விடப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் இந்த மாம்பழங்கள் ஆடம்பரப் பொருளாகவும், சிறப்புப் பரிசாகவும் கருதப்படுகின்றன. மியாசாகி வகை மாம்பழங்களில் 17% சர்க்கரை மூலக்கூறுகள் இருப்பதால் உலகின் அதிசுவையான மாம்பழமாக கருதப்படுகிறது.
இதனாலேயே இதன் விலையும் அதிகமாக உள்ளது, ஒரு ஜோடி மியாசாகி மாம்பழங்கள் வியக்கத்தக்க வகையில் ரூ.2.7 லட்சம் (தோராயமாக $3,000) விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்த மாம்பழத்தின் புகழ் ஜப்பானின் எல்லையினை கடந்து இந்தியா வரை பரவியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், பீகாரைச் சேர்ந்த விவசாயி சுரேந்திர சிங், இந்தியாவில் மியாசாகி மாம்பழங்களை வெற்றிகரமாக பயிரிட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக விலை கொண்ட மாம்பழங்களில் ஒன்றாக மியாசாகி இருப்பது குறித்து பலரும் இவை வைரத்தை விட விலை உயர்ந்ததாக உள்ளது என ஒப்பிட்டு வருகின்றனர்.