• May 10, 2025
  • NewsEditor
  • 0

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை ‘அரசின் ஒரு பிரசாரகர்’ என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ANI நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அதில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு விக்கிபீடியா மறுப்பு தெரிவித்த நிலையில், ANI நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விக்கிபீடியாவுக்கு ‘ANI பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரையை அதன் பக்கத்திலிருந்து நீக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. 

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விக்கிபீடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இரண்டும் ஜனநாயகத்தின் அடித்தளத் தூண்கள். இதுதான் அரசியலமைப்பின் அடிப்படை அம்சம். ஒரு ஜனநாயகம் செழிக்க, இரண்டும் நிறைவாக தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்.

இரண்டும் திறந்த நிறுவனமாக எப்போதும் பொதுக் கண்காணிப்பு, விவாதம், விமர்சனம் போன்றவற்றுக்கு திறந்திருக்க வேண்டும். உண்மையில், நீதிமன்றங்கள் விவாதங்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்க வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

விவாதப் பிரச்னை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கியமான பிரச்னையும் மக்களாலும், பத்திரிகைகளாலும் விவாதிக்கப்பட வேண்டும்.

அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு நீதிபதிகள் பதிலளிக்க முடியாது என்பதையும் விமர்சிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு செய்தி நீதிமன்றத்தையோ அல்லது நீதிபதிகளையோ அவமதித்தால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால், நிச்சயமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

ஆனால் இதை நீக்கு, அதை அகற்று என ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல… நீதித்துறை உட்பட, எந்தவொரு அமைப்பின் முன்னேற்றத்திற்கும், சுயபரிசோதனை முக்கியமானது. பிரச்னைகள் குறித்து வலுவான விவாதம் நடந்தால் மட்டுமே சுயபரிசோதனை நடக்கும். எனவே, டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *